உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரசின் (தீநுண்மி) தாக்கம் இந்தியாவில் அதி தீவிரம் அடைந்துள்ளது. உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பட்டியலில் பிரேலிலைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42 லட்சத்தை கடந்துள்ளது. நேற்று ஒரேநாளில் இதுவரை இல்லாத அளவிற்கு 90 ஆயிரத்து 802 பேர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே சமயம், தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 32 லட்சத்து 50 ஆயிரத்து 429 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களின் விழுக்காடு 77.30 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42 லட்சத்து நான்காயிரத்து 613 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 16 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதன்மூலம் நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆயிரத்து 642 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவைக் கட்டுப்படுத்த மத்தியில் ஆளும் பாஜக அரசு தவறிவிட்டதாக, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்துள்ளார்.
அதில், "உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. தொற்றைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி ஆரோக்கிய சேது செயலியின் மூலம் பொதுமக்களின் தரவுகளை எடுத்துக்கொண்ட பாஜக அரசு, கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தவறிவிட்டது.
தொற்றைக் கட்டுப்படுத்திவிட்டதாகக் கூறி மக்களை ஏமாற்றி கைத்தட்டச் சொன்னது, விளக்கேற்றச் சொன்னது, டார்ச் லைட் அடிக்கச் சொன்னது போன்ற போலியான செயல்களின் உண்மை நிலையை மக்கள் அறிவார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.