கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 21ஆம் தேதிவரை ஊரடங்கு என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பை வரவேற்று காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவராக முழு மனதுடன் வரவேற்கிறேன். இதற்கு முழு ஒத்துழைப்பையும் அளிக்க தயாராகவுள்ளேன்.
இந்த இக்கட்டான நேரத்தில் தன்னலம் மறந்து பொதுநலனுக்காக ஒன்றிணைவதற்குத் தயாராக உள்ளேன். இந்தத் திட்டத்தைச் சரியாக வழிநடத்த சில கூடுதல் நடவடிக்கைகளை நான் பரிந்துரை செய்கிறேன்.
இதுபோன்ற நேரத்தில் மருத்துவர்கள், சுகாதாரத் துறை பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும்விதமாக அவர்களின் பாதுகாப்பு உபகரணங்கள் எந்தவித தடைகளும் இன்றி தயாரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும், அடித்தட்டு மக்கள் இந்தச் சூழலில் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே அவர்களைப் பாதுகாக்கும்விதமாக குறைந்தபட்ச உதவித்தொகையும், இலவச நியாயவிலைக் கடை பொருள்களும் கிடைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், தற்காலிகமாகப் பணி மேற்கொள்ள முடியாத ஊழியர்களின் வேலை, வருவாயை அரசு உறுதிப்படுத்த வேண்டும். விவசாயிகள், நடுத்தரவர்க்கத்தினரின் கடன் தொகை செலுத்தும் தவணையை ஆறு மாதத்திற்கு நீடிக்க வேண்டும்" எனக் குறிப்பிடுள்ளார்.
இதையும் படிங்க: லாக் டவுனுக்காக சிறப்பு கண்கானிப்பு மையம்: மத்திய அரசு ஏற்பாடு