நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து பத்தாவது நாளாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மத்திய அரசின் மீது தொடர் குற்றச்சாட்டை முன்வைத்துவருகின்றன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.
இதையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "நாடு இதுபோன்ற நெருக்கடியான சூழலைச் சந்தித்துவரும் வேளையில் மத்திய அரசு தொடர்ச்சியான விலை உயர்வை மேற்கொள்வது மோசமான செயல்பாடாகும். இதுபோன்ற தவறான நடவடிக்கையால் பொதுமக்களுக்கு நிதிச்சுமையை அதிகரித்து சுமார் 2.6 லட்சம் கோடி வருவாயை மத்திய அரசு ஈட்டியுள்ளது.
இந்தத் தவறான நடவடிக்கையை மத்திய அரசு திரும்பப்பெற்று நாட்டின் குடிமக்களைப் பாதுகாக்க வேண்டும். மக்களிடம் தற்சார்பை வலியுறுத்தும் பிரதமர் இதுபோன்ற அர்த்தமற்ற சுமையை திணிக்கக் கூடாது "எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 95 லட்சம் வாகன ஓட்டிகளை உள்ளடக்கிய அகில இந்திய மோட்டார் வாகனப் போக்குவரத்து சங்கம் பெட்ரோல், டீசல் விலையை திரும்பப் பெறாவிட்டால் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: 25% பங்குகளை விற்பனை: இலக்கை நோக்கி நகரும் ஜியோ நிறுவனம்