புதுச்சேரி: ஆதிதிராவிடர் உயர்மட்டக் கூட்டத்தைப் புறக்கணித்த அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்யுங்கள் என, சமூக அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.
புதுச்சேரி அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாநில அளவிலான உயர்மட்டக்குழு கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் தீபாய்ந்தான், விஜயவேனி, சந்திர பிரியங்கா, அரசு சாரா உயர்மட்டக் குழு பிரதிநிதிகள், துறை அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டம் தொடங்கிய உடன் சமூக அமைப்பின் பிரதிநிதி தங்க கலைமாறன் எழுந்து பேசினார். நாலரை ஆண்டுகள் பின் இந்த கூட்டத்தை கூட்டி உள்ளீர்கள். அடுத்த தேர்தல் வருகிறது. அதன் பின் இக்கூட்டம் எப்போது கூடும் என தெரியாது. எனவே குழுவில் யார் உள்ளார்கள் என தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதை மற்றவர்கள் சிலரும் ஆதரித்துப் பேசினர்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் நீல கங்காதரன் பேசினார். அப்போது, எந்தத் துறையிலும் தாழ்த்தப்பட்டோருக்கு தனி திட்டங்கள் இல்லை என குற்றஞ்சாட்டினார். இங்கு 26 ஐபிஎஸ் அலுவலர்கள் உள்ளனர். ஆனால் ஆதிதிராவிட நலத்துறைக்குத் தனியாக, எந்த ஐ.ஏஎஸ் அலுவலரும் நியமிக்கப்படவில்லை என்றார்.
இக்கூட்டத்தில் அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட வரிசையில் பெரும்பாலான அலுவலர்கள் இல்லை. இதனை விடுதலை சிறுத்தை கட்சியின் முதன்மை செயலர் தேவபொழிலன் பேசும்போது சுட்டிக்காட்டினார். இதையடுத்து கூட்டத்தில் பங்கேற்ற பலரும் அலுவலர்கள் வராமல் கூட்டத்தை நடத்த வேண்டாம் என்று ஆவேசமாக கூறினார் .
அப்போது பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, கூட்டத்திற்கு வராத சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இக்கூட்டத்திற்கு வராத அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என அனைவரும் வலியுறுத்தினர்.