உலக நாடுகளை கரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்திவருகிறது. இந்த பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சமூக இடைவெளி அவசியம் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியது. இதே நடவடிக்கையை வைரஸால் பேரழிவைச் சந்தித்த சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடைப்பிடித்துவருகின்றன.
எனினும் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கும் இடங்களில் இந்த சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையை களையும் விதமாக சீனாவில் உள்ள ஒரு கடையில் மக்கள் பொருட்களை வாங்க, ஒருவருக்கொருவர் இடைவெளி விட்டு பொருள்கள் வாங்கும்படி கோடுகள் அமைக்கப்பட்டிருந்தது.
இதே நடைமுறையை மகாராஷ்டிரா மாநிலத்திலும் மக்கள் தீவிரமாக கடைப்பிடித்துவருகின்றனர். அதன்படி கோலாப்பூர் நகருக்கு அருகிலுள்ள புலாச்சி ஷிரோலி கிராமத்திலும் இந்த சமூக இடைவெளி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவர் கூறுகையில், “முதலில் எனக்கு இது பைத்தியக்கார யோசனையாக தோன்றியது. ஆனால் சிறிது நேரம் கழித்து, இது ஒரு பயனுள்ள யோசனை என்பதை உணர்ந்தேன். ஏனெனில் சமூக தொலைவு பராமரிக்கப்படும். அதேபோல் மக்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளும் கிடைக்கும்.
இதனை மற்ற கடைகளும் கடைப்பிடிக்க வேண்டும். மக்களும் அடையாளத்துக்குள் நின்று பொருட்கள் வாங்க வேண்டும். இது வசதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். எனினும் மக்கள் இதை எவ்வாறு எதிர்கொள்வார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை.
பொதுவாக காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களை வாங்கும்போது மக்கள் பீதியடைய வேண்டாம்” என்றார். இந்தியாவில் கரோனா வைரஸூக்கு 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகெங்கிலும் 19 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா தொற்று: பிரதமரிடம் நிதி கேட்டு நாராயணசாமி கடிதம்