கரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள்களிலிருந்து ஆதரவற்றோருக்கு உணவளிப்பது, சாலையில் உள்ள விலங்குகள், பறவைகளுக்கு உணவளிப்பது எனத் தொடர்ந்து சமூகப் பணியில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார், புதுச்சேரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன்.
இந்நிலையில், சமூக அறக்கட்டளை சார்பாகச் சரவணன் மற்றும் சமூக குழுவுடன் சேர்ந்து கரோனா முன்னெச்சரிக்கையாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
ஊரடங்கு நாட்களில் சாலைகளுக்கு வரும் மக்களுக்கு கரோனா குறித்து விளக்குவதும், அவர்களை வீட்டை விட்டு வெளியே வராமல் அவர்களது வீட்டிற்குள்ளேயே இருக்க வலியுறுத்தியும், தலைக் கவசத்தை கரோனா வைரஸ் வடிவில் வடிவமைத்து, சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் வரும் மக்களுக்கு விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார், சரவணன்.
இது தவிர, கரோனாவின் பாதிப்பு குறித்து விளக்கியும் அவர்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கூறியும், அவர்களது காலில் விழுந்தும்; பாக்கமுடையான் பட்டு கொக்கு பார்க் அருகே உள்ள சாலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார், சரவணன்.
காவல் துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், பொது மக்களாகிய நாம் இதில் விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்கிறார், சரவணன்.
தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாகச் சாலையில் வசிக்கும் விலங்குகள், பறவைகளுக்கு உணவளித்து வரும் சரவணன், தற்போது கரோனா முன்னெச்சரிக்கையாக செய்து வரும் சமூகத் தொண்டை பொதுமக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க... எமன் பொம்மை அணிந்து காவல் துறையினர் விழிப்புணர்வு