அரசியலைமைப்புச் சட்டம் 370 நீக்கப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இந்திய எல்லைப் பகுதிகளில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, இரு நாடுகளுக்கிடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதுகுறித்து ராணுவத் தளுபதி பிபின் ராவத், "ஜம்மு - காஷ்மீரில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய மூன்றுக்கும் தலைமை தாங்குவதற்காக புதிய தலைமை பதவி உருவாக்கப்படும் என பிரதமர் மோடி சுதந்திர தின உரையின்போது தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, பாதுகாப்பு அலுவலர்களின் தலைவர் என்ற பொறுப்பு உருவாக்கப்பட்டது. டிசம்பர் 31ஆம் தேதியோடு பிபின் ராவத் ஓய்வுபெறவுள்ளதால், இவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராணுவ தளபதியாக பிபின் ராவத் டிசம்பர் 31ஆம் தேதி, 2016ஆம் ஆண்டு பொறுப்பு ஏற்றார். அவர் பொறுப்பேற்றதில் இருந்தே, காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வந்தார்.
பள்ளத்தாக்குப் பகுதியை ராணுவ கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த பிறகும் கூட, சூழ்நிலை இந்தியாவுக்குச் சாதகமாக நிலவிட தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என பாதுகாப்பு அமைச்சகம் சார்பாக தெரிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சேவாக் - கங்குலியின் சாதனையை முறியடித்த ஹிட்மேன் ஜோடி!