காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் கர்நாடகா முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா, மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், சித்தராமையாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் வீடு திரும்பியதும் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதன் காரணமாக, மருத்துவமனை முன் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து சித்தராமையா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், தனது உடல்நிலை குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துமனைக்கு வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக, டிசம்பர் 5ஆம் தேதி கர்நாடகாவில் நடைபெற்ற 15 சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் சித்தராமையா கடுமையாக பரப்புரை மேற்கொண்டார். ஆனால், 15 இடங்களில் காங்கிரஸ் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.