உத்தரப்பிரதேசத்தில் உள்ள கிங் ஜார்ஜின் மருத்துவப் பல்கலைக்கழகத்தில், கடந்த ஆண்டு குஷினகர் மாவட்டத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களை அறுவை சிகிச்சை மூலம் பிரித்திட முடிவு செய்தனர்.
இக்குழந்தைகளுக்கு இரண்டு கல்லீரல்கள் இருந்தபோதிலும், அவை இணைந்திருந்தன. அதேபோல், எபிகார்டியம் (இதயத்தின் வெளிப்புற அடுக்கு), மார்பு, உணவுக் குழாயின் ஒரு பகுதியும் ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தால், மருத்துவர்களுக்கு குழந்தைகளைப் பிரிப்பது சவாலாக இருந்துள்ளது.
இந்நிலையில், இந்தக் குழந்தைகளை அறுவை சிகிச்சை துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.என், பல்வேறு சூப்பர்-ஸ்பெஷாலிட்டி துறைகளின் உதவியுடன் பிரிக்கத் திட்டமிட்டார். குழந்தை மருத்துவ அறுவை சிகிச்சையின் பேராசிரியர் குரீல் மற்றும் ஜே.டி.ராவத் ஆகியோர் இந்த அறுவை சிகிச்சையை ஒருங்கிணைத்தபோது, இரைப்பை அறுவை சிகிச்சைப் பிரிவின் தலைவர் பேராசிரியர் அபிஜித் சந்திரா, விவேக் குப்தா ஆகியோர் கல்லீரல் மற்றும் உணவுக் குழாயைப் பிரிப்பதில் பணியாற்றினர்.
மருத்துவர் அம்ப்ரிஷ் குமார் இதயம் மற்றும் மார்பைப் பிரிப்பதில் ஈடுபட்டார். மயக்க மருந்து துறையின் தலைவர் தலைமை பேராசிரியர் ஜி.பி.சிங், வினிதா சிங், சதீஷ் வர்மா ஆகியோர் அனைத்து அறுவை சிகிச்சைகளிலும் மருத்துவர்களுடன் இணைந்துப் பணியாற்றினார்கள்.
இந்நிலையில், சுமார் ஒன்பது மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சைக்குப் பிறகு, குழந்தைகள் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டனர். மேலும், தற்போது இரண்டு குழந்தைகளின் உடல்நீலையும் சீராக உள்ளதாகவும், குழந்தைகள் உணவை உட்கொண்டு ஜீரணிக்கத் தொடங்கும்போதுதான் உண்மையான நிலை தெரிய வரும் எனவும் கூறப்படுகிறது.