உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்திலுள்ள உம்ரி பேகமஞ்ச் பகுதியில் உள்ள பரஸ்பட்டி மஜ்வார் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்தது.
இந்தப் புகாரின் அடிப்படையில் அரசு அலுவலர்கள் விசாரணை நடத்த சென்றனர். அப்போது புகார்தாரரும், கிராமத் தலைவரின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் இருவரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அப்போது திடீரென துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் தேவேந்திர பிரதாப் சிங் (52), கன்ஹையலால் பதக் (30) ஆகியோர் மீது துப்பாக்கிக் குண்டு துளைத்தது. இதையடுத்து இருவரும் ரத்த வெள்ளத்தில் தரையில் சரிந்து சம்பவ இடத்திலே இறந்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமுற்ற சந்திர மோகன் யாதவ் (35), விஜய் குமார் சிங் (32), அதுல் சிங் (19) ஆகியோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இது குறித்து உரிய விசாரணை நடத்தி விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும், காயமுற்றவர்களுக்கு உரிய சிகிச்சையை உறுதி செய்யவும் முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா அச்சம் கிரமத்திற்கு வெளியே படகில் தனிமைப்படுத்தப்பட்ட முதியவர்