கர்நாடகாவின் ஆளும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியின் அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் மும்பையில் உள்ள தனியார் விடுதியில் கடந்த மூன்று நாட்களாக தங்கியுள்ளனர். அதிருப்தியில் உள்ளவர்களை சமாதானம் செய்து அழைத்து வர அவர்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான டி.கே. சிவகுமார் சென்றுள்ளார். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக அவரை விடுதிக்குள் நுழைய மகாராஷ்டிரா காவல்துறை அனுமதிக்கவில்லை. மேலும், அவர் தங்குவதற்கான முன்பதிவு அனுமதியையும் விடுதி நிர்வாகம் நிராகரித்துள்ளது.
இதுகுறித்து சிவகுமார் கூறுகையில், "அரசியலில் நிரந்தர பகைவரும் இல்லை, நிரந்தர நண்பரும் இல்லை. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் மாறலாம். நான் அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களைச் சந்திக்க இங்கு வந்துள்ளேன். நாங்கள் அரசியிலில் ஒன்றாக பிறந்தோம், ஒன்றாகவே இறப்போம். அவர்கள் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள்" என்றார்.