சென்னை: சென்னையில், காத்தாடி விற்பனை செய்த மூன்று பேர் பெங்களூருவில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்து 6,500 காத்தாடிகள் மற்றும் அதை தயாரிக்க பயன்படுத்திய 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை, வியாசர்பாடி பகுதியில் கடந்த 17 ஆம் தேதியன்று மாஞ்சா நூல் அறுத்து சிறுவனும், ஜிலானி என்ற பெண்ணும் காயமடைந்தனர். காயமடைந்த சிறுவனுக்கு கழுத்தில் ஏழு தையல் போடப்பட்டது.
அதேபோல, ராயபுரம் தொப்பை தெருவை சேர்ந்த ஜிலானி பாஷா என்ற பெண் தன்னுடைய மாமியார் வீட்டிற்கு செல்வதற்காக வியாசர்பாடி மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல் அவருடைய கழுத்து மற்றும் கையில் அறுத்துள்ளது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் காயமடைந்த ஜிலானி பாஷாவை சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னையில் மாஞ்சா நூல் காத்தாடி விடுவதற்கும், விற்பனை செய்வதற்கும் சென்னை மாநகர காவல் துறை தடை விதித்துள்ள நிலையில், மாஞ்சா நூல் காத்தாடி பறக்க விட்டது யார்? என வியாசர்பாடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்தது, மற்றும் காத்தாடி பறக்க விட்டது தொடர்பாக புளியந்தோப்பு சரகத்தில் 3 சிறுவர்கள் உட்பட 10 பேரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: நெல்லையில் இளைஞர் படுகொலை....சந்தேகத்தின் பேரில் 3 பேரிடம் போலீசார் விசாரணை!
மேலும், காத்தாடி பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், எங்கிருந்து காத்தாடி விற்பனை செய்யப்பட்டது என போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் சிலர் ஆன்லைன் மற்றும் இன்ஸ்டாகிராம், டெலிகிராம், அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட செயலிகள் மூலம் காற்றாடி மற்றும் உபகரணங்களை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
உடனடியாக போலீசார் உதவி ஆய்வாளர் கிரண்ராஜ் தலைமையில் கடந்த 23 ஆம் தேதியன்று கர்நாடகா மாநிலம் பெங்களூர் கே.ஜி.ஹல்லி, சமாதான நகர பகுதியில் இருந்த மன்சூர், முகமது பாசில் மற்றும் இம்ரான் ஆகிய மூன்று பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 6,500 காற்றாடிகள், மாஞ்சா நூல்கள், லொட்டாய் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் கடந்த 24 ஆம் தேதி சென்னை அழைத்து வந்த போலீசார், காத்தாடி விற்பனை தொடர்பாக அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் மீது வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்