மகாராஷ்டிராவில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் 24ஆம் தேதி வெளியாகின. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 161 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 105 இடங்களில் வென்ற போதிலும், தனித்து ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை அக்கட்சிக்குக் கிடைக்கவில்லை. இதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சிவசேனா, 56 இடங்களை வைத்துக்கொண்டு பாஜகவிடம் ஆட்சியில் சமபங்கு கோரிவருகிறது.
ஆனால், முதலமைச்சர் பதவியை விட்டுத்தர பாஜக மறுத்துவருகிறது. இதனிடையே, சிவசேனா கட்சியின் மூத்தத் தலைவரான சஞ்சய் ராவத் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவாரை சந்தித்துப் பேசியுள்ளார். அரசியல் குறித்து சரத் பவாரிடம் பேசவில்லை என சஞ்சய் ராவத் தெரிவித்தபோதிலும், கூட்டணிக்கான அச்சாரமாக இது இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பாஜகவிடம் சிவசேனா ஆட்சியில் சமபங்கு கேட்டதற்கு, சரத் பவார் சிவசேனாவுக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகளுக்கிடையே கூட்டணி உருவாகும் எனத் தகவல் வெளியானதையடுத்து, இரு கட்சித் தலைவர்களுக்கு இடையேயான சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி?