மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மதுங்கா ரயில் நிலையத்தில் ஒருவர் தொடர்ந்து பெண்களைப் பாலியல் சீண்டல் செய்துவந்தார். இதையறிந்த சிவ சேனா மூத்தத் தலைவர் நிதின் நண்கவோங்கர் அந்த நபரை தனது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கியுள்ளார். இதைக் காணொலியாகப் பதிவுசெய்த அவர் சமூக வலைதளத்திலும் வெளியிட்டுள்ளார்.
அதில், அந்த நபரை பல நாள்களாக தான் தேடியதாக அவர் கூறியுள்ளார். மேலும், எதிர்காலத்தில் யாராவது பாலியல் சீண்டலில் ஈடுபட்டால், அவரை சரமாரியாகத் தாக்கி கையை வெட்டி விடுவேன் எனவும் அவர் மிரட்டினார். பாலியல் சீண்டல் குறித்த புகார்களை காவல் நிலையத்திற்கு வந்து அஞ்சாமல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அந்த நபர் மீது தொடர் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுவந்தன. இதையடுத்து அவர் ஜனவரி 2ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார். இருந்தபோதிலும் எந்தப் பெண்ணும் எழுத்துப்பூர்வமான புகார் அளிக்காத காரணத்தால் அவருக்குப் பிணை வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: ஆம்புலன்ஸ் வராததால் மகாராஷ்டிராவில் நிகழ்ந்த அவலம்!