பிகாரின் பூர்னியா மாவட்டத்தில் ராஷ்ட்ரிய ஜனதாள கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் சக்தி மாலிக் தனது குடும்பத்தினருடன் வசித்துவந்தார். இந்நிலையில், அக். 4 ஆம் தேதியன்று அவருடைய வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத மூன்று பேர் அவரை சரமாரியாக சுட்டுக்கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்த் பாண்டே விசாரணை நடத்தினர். தொடர்ந்து வந்த தடயவியல் வல்லுநர் குழு சம்பவம் நடைபெற்ற இடத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
கொலை செய்யப்பட்ட மாலிக் நடைபெறவிருக்கும் பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ராணிகஞ்ச் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடத் தயாராக இருந்துள்ளதாகவும், அதனால் அவர் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர் இந்த கொலைக்கு பின்னணியில் இருக்கலாம் என சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.
இது தொடர்பாக ஊடகங்களிடையே பேசிய காவல் துறை கண்காணிப்பாளர் விஷால் சர்மா கூறுகையில், "சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து நாங்கள் ஒரு நாள்குறிப்பை மீட்டெடுத்துள்ளோம்.
அதில் உள்ள தகவலின்படி, மாலிக் மக்களுக்கு வட்டிக் கடன் வழங்கி வந்தது தெரியவந்துள்ளது. கடன் வாங்குபவர்களிடம் அவர் வெற்று காசோலைகள் மற்றும் முத்திரை தாள்களில் கையெழுத்து வாங்கி வைத்துகொண்டு பின்னர் அச்சுறுத்தி வந்துள்ளார் என அறியமுடிகிறது.
அதேபோல, கடன் வசூலிப்பதிலும் அவர் கறாராக இருந்துள்ளார். கடனாளிகளிடம் அவர் கடுமையாக நடந்துகொண்டுள்ளார்.
அக்டோபர் 3ஆம் தேதி, அவர் ஒருவரை 3-4 மணி நேரம் உட்கார்ந்து, தேர்தல் காலங்களில் பாட்னாவுக்கு அவருடன் வருமாறு மிரட்டியும் உள்ளார். இதனால் விரக்தியடைந்த அவர், மாலிக்கை கொல்ல முடிவு செய்ததாக தெரிகிறது.
எஃப்.ஐ.ஆரில் பெயரிடப்பட்ட ஆறு பேருக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. மாலிக்கை கொலை செய்த ஏழு பேரையும் நாங்கள் கைது செய்துள்ளோம்.
தனிப்பட்ட லாபங்களுக்காக காவல் துறை அலுவலர்கள் யாராவது அவர்களுக்கு உதவி செய்தார்களா என்பதையும் நாங்கள் விசாரிப்போம்" என அவர் கூறினார்.
மாலிக்கின் மனைவி குஷ்பூ தேவி அளித்த புகாரைத் தொடர்ந்து, ஆர்.ஜே.டி நிறுவனத் தலைவரான லாலுவின் இளைய மகனும், பிகார் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி பிரசாத் யாதவ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவர் அனில் குமார் சாது, லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானின் மருமகன் ஆகியோர் பெயர்கள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
கடந்த செப்.11ஆம் தேதி ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மாநில செயலாளர் பொறுப்பிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் சக்தி மாலிக் வெளியேற்றப்பட்டிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மிக முக்கிய திருப்பங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.