காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி கடந்த ஜூலை 3ஆம் தேதி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இரண்டு மாதங்களாக ராகுல் காந்திக்கு பதில் யாரையும் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்ந்தேடுக்காமல் அக்கட்சி காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் கட்சியில் உள்ள தலைவர்கள் பல விதமான கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், காங்கிரஸ் செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் அடுத்த தலைவராக யாரை தேர்ந்தேடுக்கலாம் என்பது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர், "காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களையும், கட்சி செயற்குழுவையும் ராகுல் காந்தி சொன்னபடி புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்படி கட்சியினர் கேட்டுக் கொண்டுள்ளனர். முதலில் இடைக்கால தலைவரைத் தேர்ந்தேடுக்க வேண்டும். பின்னர், உட்கட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் மக்களிடையே கட்சியை பற்றி நம்பகத்தன்மை உருவாகும்" என்றார்.