ராமர் கோயில் அடிக்கல் நாட்டும் விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 5ஆம் தேதி அயோத்திக்கு வருகை தரவுள்ளார்.
இதனைத்தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலத்தின் எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக கோரக்பூர் மண்டலத்தின் காவல்துறை கூடுதல் இயக்குநர் தாவா ஷெர்பா கூறுகையில், “உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச், சித்தார்த்நகர், ஸ்ராவஸ்தி மற்றும் பஹ்ரைச் ஆகிய பகுதிகளில் எல்லை பாதுகாப்பு படைகள் கூடுதல் விழிப்புடன் செயல்பட்வருகின்றனர்.
எல்லை வழியாக மக்களை அனுமதிப்பதற்கு முன்பு அவர்களின் முழு விவரங்களையும் சேகரித்து வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தோ-நேபாள எல்லையில் (மகாராஜ்கஞ்சில்) சோனாலி மற்றும் துடிபரி புறக்காவல் நிலையங்களில் மெட்டல் டிடெக்டர்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், மோப்ப நாய்கள் மற்றும் பெண்கள் பிரிவின் ஒரு படைப்பிரிவும் நிறுத்தப்பட்டுள்ளன. பிரதான சாலைகள் தவிர மற்ற முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்தோ-நேபாள எல்லை காவல்துறை, உள்ளூர் புலனாய்வு பிரிவு மற்றும் பிற புலனாய்வு அமைப்புகளுக்கு எச்சரிக்கையாக இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஹோட்டல், ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற பொது இடங்களில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன” என்றார்.