ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு தகுதி வழங்கும் சட்டப்பிரிவுகள் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி மத்திய அரசாங்கம் திரும்பப்பெற்றது. அத்துடன் அம்மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. அதனையடுத்து மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் சட்டப்பேரவை அல்லாத லடாக் என்ற யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் என்ற தகுதிக்குள் கொண்டுவரப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாநிலத்தில் பல்வேறு சட்டவிதிகள் மற்றும் தடைகள் அமலுக்கு வந்தது. இணையம் மற்றும் தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டது.
ஸ்ரீநகர் உள்ளிட்ட பழைய நகரத்தின் சில பகுதிகள் முள்வேலிகளால் சுற்றி வளைக்கப்பட்டன. நகரத்தின் முக்கிய வழித்தடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்த நிலை கடந்த ஓராண்டிற்கும் தொடர்கிறது. இதன் ஒரு பகுதியாக, அங்கு இணையப் பயன்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் காஷ்மீரில் காலவரையறையின்றி இணையதளத்தை முடக்கி வைப்பதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து ஜனவரி 18 ஆம் தேதி, முடக்கி வைக்கப்பட்டிருந்த செல்பேசி சேவைகள் மீண்டும் தொடங்கின. ஆனால் அப்போதும் 4ஜி இணையத்தள சேவைகள் தொடங்கப்படவில்லை.
இந்நிலையில், கடந்த மே 11 ஆம் தேதியன்று உள்துறை செயலாளர் தலைமையில் 3 அலுவலர்கள் அடங்கிய சிறப்புக் குழுவை அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், 4 ஜி வழங்கப்படாதது குறித்து மனுதாரரின் கருத்துக்களை ஆராயவும், அவர்கள் பரிந்துரைத்த மாற்று வழிகளைக் கருத்தில் கொள்ளவும் உத்தரவிட்டது.
அந்த குழுவானது அமைக்கப்பட்டு இரண்டு மாதங்களான நிலையில் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றவில்லை என மனுதாரர்கள் தரப்பில் நீதிமன்ற அவமதிப்மு வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், நேற்று (ஜூலை24) நடைபெற்ற இணைய சேவை கட்டுப்பாடுகள் குறித்த விசாரணையில் அந்த சிறப்பு குழுவானது, தனது நடவடிக்கைகள் குறித்து அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளதாக அறியமுடிகிறது.
அதில், "ஜம்மு-காஷ்மீரில் இணையத்தள சேவை முடக்கத்தை தளர்த்துவது குறித்து முடிவு செய்வதற்காக அமைக்கப்பட்ட சிறப்புக் குழு, மே மாத 15ஆம் தேதியில் முதல்முறை சந்தித்து கலந்துரையாடியது.
அந்த பரந்த அளவிலான கலந்தாய்வுக்குப் பின்னர் கள ஆய்வுகளை மேற்கொள்ள முடிவு செய்தது.
அதன் பிறகு ஜூன் 10ஆம் தேதி மீண்டும் ஒன்று கூடிய குழு, மனுதாரர்கள் பரிந்துரைத்த மாற்றுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்தும், அண்மையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத நிகழ்வுகள் உட்பட அனைத்தையும் முழுமையாகவும் விரிவாகவும் ஆராய்ந்தது.
இந்த குழு மீண்டும் 2 மாதங்களுக்குப் பிறகு சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும் பாதுகாப்பு சூழ்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டால் அதற்கேற்ப தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து குழு அமைக்கப்பட்டதால் தனியாக அரசு அறிவிப்பு தேவையில்லை.
மனுதாரர்கள் பரிந்துரைத்த மாற்றுகளின் சாத்தியக்கூறுகள் மற்றும் பிராந்தியத்தில் அண்மையில் பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்கள் நிகழ்ந்தது உட்பட இந்த விஷயத்தின் அனைத்து அம்சங்களையும் ஒரு முழுமையான மற்றும் விரிவான மற்றும் பரிசீலித்தல் மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பான அறிக்கை ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச அரசிற்கு சிறப்புக் குழுவால் முறையாக சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் சிறப்புக் குழுவால் மேற்கொள்ளப்பட்ட முழு ஆய்வுத்தகவலும் முன்வைக்கப்பட்டுள்ளது.
4 ஜி இணையத்தை மீட்டெடுக்கும் பிரச்னை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்புக் குழு சேவைகளை மீண்டும் தொடங்குவது இப்போதைய சூழலில் சரியானதாக இருக்காது என கருதுகிறது" என தெரிவித்துள்ளது.