நாடு முழுவதும் 71ஆவது குடியரசு தினம் கோலகலமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில், வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் வெவ்வேறு பகுதிகளில் சக்தி குறைந்த குண்டுகள் வெடித்துள்ளன.
திபுர்கார், தின்சுகியா, சரைடியோ ஆகிய மாவட்டங்களில் குறைந்தபட்சம் நான்கு குண்டுகள் வெடித்துள்ளன. முதல் குண்டுவெடிப்பு தேசிய நெடுஞ்சாலை 37 அருகேயுள்ள கிரஹாம் பஜாரிலுள்ள ஒரு கடையில் நிகழ்ந்தது. மற்றொன்று துலியாஜன் காவல் நிலையம் அருகே நிகழ்ந்துள்ளது. இதேபோல, இன்னும் இரு குண்டுகள் தின்சுகியா, சரைடியோ பகுதிகளில் நிகழ்ந்துள்ளன.
மொத்தம் நான்கு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளபோதும், இதில் யாரும் கொல்லப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் குண்டுவெடிப்புகள் குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாகத் தெரிவித்துள்ள காவல் துறையினர், இத்தாக்குதலுக்கு ஐக்கிய விடுதலை முன்னணி (யு.எல்.எஃப்.ஏ.) காரணமாக இருக்கலாம் என்றும் கூறினர்.
முன்னதாக குடியரசு தினத்தன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு ஐக்கிய விடுதலை முன்னணி அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 17 ஆயிரம் அடி உயரத்தில் குடியரசு தினக் கொண்டாட்டம்!