உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலின பெண் (19) ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த நான்கு ஆதிக்கச் சாதி ஆண்களால் கடந்த 14ஆம் தேதியன்று கும்பல் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார். முதுகெலும்பு உடைந்து, நாக்கு வெட்டப்பட்டு பலத்த காயங்களோடு ஆள் ஆரவரமற்ற இடத்தில் உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்த அப்பெண்ணை சிலர் மீட்டனர்.
பின்னர், டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்றுவந்தார். கடந்த 15 நாள்களாக உயிருக்குப் போராடிவந்த அவர் செப்.29ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அவருக்கு நீதி கேட்டு, நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடிக்கத் தொடங்கிய நிலையில், நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர உயிரிழந்த பெண்ணின் உடலை நள்ளிரவிலேயே காவல் துறையினர் எரியூட்டினர்.
இதனிடையே, உயிரிழந்த அந்தப் பெண்ணின் குடும்பத்தினரை அங்குள்ள அடிப்படைவாத அமைப்புகளும், சாதி சங்கங்களும் தொடர்ந்து அச்சுறுத்திவருகின்றன எனத் தகவல் வெளியாகியது.
அதன் ஒரு பகுதியாக, அக் .4ஆம் தேதியன்று 144 தடையை மீறி உயிரிழந்த பெண்ணின் வீட்டிற்கு முன்னால் ஆயிரக்கணக்கில் வலதுசாரி குழுக்களான பஜ்ரங் தளம், ஆர்.எஸ்.எஸ்., கர்ணி சேனா, உள்ளூர் பாஜக ஆதரவாளர்கள் கூடி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அச்சுறுத்தும் வகையில் முழக்கமிட்டனர்.
இது தொடர்பாக பேசிய அப்பெண்ணின் சகோதரர், "எங்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. எங்களுக்குப் பாதுகாப்பு தேவைப்படுகிறது. மரண அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் பயப்படுகிறோம். வரவிருக்கும் நாள்கள் எங்களுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும்" என அச்சத்தை வெளிப்படுத்தினார்.
இதனையடுத்து, ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பிவரும் மனித உரிமை அமைப்புகள் அவர்களுக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்கக்கோரி வலியுறுத்திவருகின்றன.
இதனிடையே, தொடர் அழுத்தம் காரணமாக இன்று அக்குடும்பத்தினருக்கு உத்தரப் பிரதேச அரசு பாதுகாப்பு அளிக்க முன்வந்துள்ளது.
சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தவும், குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் டி.எஸ்.பி. தலைமையில் மூன்று ஸ்டேஷன் ஹவுஸ் அலுவலர்கள் (எஸ்.எச்.ஓ), பெண் காவலர்கள் அடங்கிய பணியாளர்கள் ஆயுதமேந்திய பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக, கும்பல் பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட குற்றச்சாட்டில் அக். 2ஆம் தேதியன்று ஹத்ராஸ் எஸ்.பி., டி.எஸ்.பி., ஆய்வாளர் உள்ளிட்ட சில அலுவலர்கள் சி.பி.ஐ. உத்தரவின்படி இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.