புதுச்சேரியில் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது அரசு சார்பில் இலவச ஆயிரம் ரூபாய்க்கான கூப்பன் வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு வழங்கப்படாதது கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களை தொழிலாளர்கள் அறிவித்தனர். மேலும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொழில் துறை அமைச்சர் கந்தசாமி தலைமையில் தொழிற்சங்கம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின்போது சுமுக முடிவு ஏற்பட்டதையடுத்து போராட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.
இதனிடையே அரசு அறிவித்த பண்டிகை கூப்பன் ஆயிரம் ரூபாய்க்கு பதில் ரூபாய் 500 வழங்கப்பட்டது. எனவே அரசு அறிவித்தபடி ரூபாய் ஆயிரம் வழங்க வேண்டும் என்றும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள தலைமைச் செயலகத்தை அமைப்புசாரா தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் தலைமைச் செயலகம் உள்ளே நுழைய முற்பட்டபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தைக்கு தொழிற்சங்கங்களின் தலைவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். தலைமைச் செயலகத்தில் தலைமை செயலர் அஸ்வின் குமாரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.