நாடு முழுவதும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, வகுப்புகள் நடைபெறாத காரணத்தாலும், மாணவர்களின் நலன் கருதியும் பொதுத்தேர்வுகளையும், பருவத் தேர்வுகளையும் ரத்து செய்து பல்வேறு மாநிலங்களும் உத்தரவிட்டுள்ளன.
இந்நிலையில், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10, 12ஆம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வுகள் ஜூலை மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தன. இந்தத் தேர்வினை ரத்து செய்யக்கோரி விழுப்புரம் தொகுதி எம்பியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளருமான ரவிக்குமார், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "நாளுக்கு நான் அதிகரித்து வரும் கரோனா அச்சுறுத்தலால் பொதுத் தேர்வுகள் நடத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை பல்வேறு மாநில அரசுகள் வெளிப்படுத்தியுள்ளன. கரோனா தொற்று நோய் காரணமாக, சிபிஎஸ்இ வாரியம் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்தது. இதையடுத்து சிபிஎஸ்இ வாரியம் வெளியிட்டுள்ள மே மாத அறிவிப்பின்படி, ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் அனைத்தும் ஜூலை 1 முதல் 15ஆம் தேதிவரை நடைபெறும் எனத் தெரிகிறது.
இருப்பினும், பல சிபிஎஸ்இ பள்ளிகள் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்தப்படும் மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. எனவே, அந்தப் பள்ளிகளில் தேர்வுகள் நடைபெறுவது கடினம். உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு மத்திய மற்றும் மாநில அரசுகளே தேர்வு ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புக்கான சிபிஎஸ்இ முடிவுகளுக்கு மாணவர்களின் உள் மதிப்பெண்கள், முந்தைய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டும் அறிவிக்கலாம். இந்த நெருக்கடியின் போது தேர்வுகளை நடத்துவது மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, சிபிஎஸ்இ தேர்வை ரத்து செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.