காங்கிரஸ் எம்பி சசி தரூர் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியை விமர்சிக்கும் வகையில் 2018 அக்டோபர் மாதம், 'தி பேராடாக்சிக்கல் பிரைம்மினிஸ்டர்' என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
இந்நிலையில், 2018 அக்டோபர் 28ஆம் தேதி, பெங்களூரு இலக்கிய திருவிழாவில் கலந்துகொண்ட சசி தரூர், இந்த புத்தகம் குறித்து பேசினார். அப்போது, ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவர், பிரதமர் நரேந்திர மோடியை சிவாலிங்கத்தின் மேல் அமர்ந்திருக்கும் தேள் போன்றவர் என விமர்சித்தாக கூறினார்.
இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், டெல்லி பாஜக தலைவர் ராஜ் பப்பார் சசி தரூரின் பேச்சு இந்துக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பான வழக்கை விசாரித்து வரும் டெல்லி நீதிமன்றம், எம்பி சசி தரூரை ஜூன் 7ஆம் தேதி, நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.