மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள லோனார் ஏரி, சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விண்கல் பூமியைத் தாக்கியபோது உருவானதாக கூறப்படுகிறது. இந்த ஏரி சுற்றுலாப் பயணிகளின் ஹாட்ஸ்பாட் ஆகவும் திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில், திடீரென்று ஜூன் மாத தொடக்கத்தில் ஏரியின் நிறம் பிங்க் நிறத்தில் மாறியது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. இதையடுத்து, ஏரியின் நீர் மாதிரியை சேகரித்த வனத்துறையினர், புனேவில் உள்ள ஏ.ஆர்.ஐ, நாக்பூரில் உள்ள என்.இ.ஆர்.ஐ ஆகிய இரண்டு ஆராய்ச்சி மையங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, வெற்றிகரமாக ஆய்வை முடித்த ஏ.ஆர்.ஐ மையம், நீரில் உள்ள ஹாலோஆர்கீயா என்ற பாக்டீரியவால்தான் பிங்க் நிறத்தில் மாறியுள்ளதாக கண்டறிந்துள்ளனர். சூரிய ஒளியின் உதவியுடன் இந்த பாக்டீரியாக்கள் வளர்ச்சியடைந்து நிற மாற்றத்தினை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதி, லோனார் ஏரியின் நிற மாற்றம் மோசமானது ஆகும். ஏரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பாதுகாக்க வேண்டிய மாவட்ட ஆட்சியரும், லோனார் நகராட்சியும் அலட்சிய மனப்பான்மையுடன் இருந்துள்ளனர் என அதிருப்தி தெரிவித்தார்.