குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் பல்வேறு தரப்பினரால் தாக்கல்செய்யப்பட்ட 140-க்கும் மேற்பட்ட மனுக்களின் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த மனுக்களை தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, நீதிபதிகள் அப்துல் நசீர், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை மேற்கொண்டது.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக முன்னிலையான வழக்கறிஞரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான கபில் சிபில், தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் விசாரிக்கும்வரை அச்சட்டத்திற்கு இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும் என வாதத்தை முன்வைத்தார்.
அதற்கு தலைமை நீதிபதி, இடைக்காலத் தடைவிதிப்பதற்கான அவசியம் எதுவும் இல்லை எனத் தெரிவித்தார். பின்பு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பெறப்பட்ட மனுக்களுக்கு பதிலளிக்க எத்தனை காலம் தேவைப்படும் என மத்திய அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக இதுவரை 80 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதற்கு பதிலளிக்க நான்கு வார கால அவகாசம் தேவை எனத் தெரிவித்தார்.
வாதங்களைக் கேட்டபின் தலைமை நீதிபதி போப்டேவின் அமர்வு, மனுக்களுக்கு பதிலளிக்க நான்கு வார காலம் கெடு விதித்துள்ளது. மேலும் சி.ஏ.ஏ. தொடர்பான மனுக்கள் அனைத்தும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறி வழக்கை ஒத்திவைத்துள்ளது.
இதையும் படிங்க: சொந்தத் தொகுதிக்கு மகளுடன் செல்லும் சோனியா காந்தி