2012ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய நிர்பயா கூட்டு பாலியல் பலாத்கார கொடூர கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு நான்கு பேர் திகார் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களுக்கு வருகிற 22ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்ற கடந்த 7ஆம் தேதி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கான மரண தண்டனை (கறுப்பு) உத்தரவு நால்வருக்கும் வழங்கப்பட்டது.
இதையடுத்து குற்றவாளிகளில் இருவர் உச்ச நீதிமன்றத்தில் கடைசி நிவாரண மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து இருவர் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அளித்தனர். இந்த மனுவையும் குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்தார்.
எனினும் நால்வரின் மரண தண்டனை நிறைவேற்றும் தேதி அடுத்த மாதம் (பிப்ரவரி) 1ஆம் தேதிக்கு தள்ளிப்போனது.
இந்நிலையில் மரண தண்டனை குற்றவாளி நால்வரில் ஒருவரான பவன் குமார் குப்தா, உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “குற்றம் நடந்தபோது தான் ஒருவர் இளஞ்சிறார். ஆகவே எனது தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். எனினும் அவர் தனது வயது தொடர்பாக எவ்வித ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர். பானுமதி, அசோக் பூஷண், ஏ.எஸ். போபணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை இன்று (ஜன.20) நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
இந்த நிலையில் நிர்பயாவின் வழக்குரைஞர் சீமா குஷ்வாஹா ஈடிவி பாரத்துக்கு அளித்த பேட்டியில், “குற்றவாளிகள் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை தாமதப்படுத்த இவ்வாறு தந்திரத்தை கையாளுகின்றனர்” என குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: நிர்பயா வழக்கு: குற்றவாளியின் மனு தள்ளுபடி!