2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்துகொல்லப்பட்ட வழக்கில், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் நான்கு பேருக்கும் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி தண்டனையை நிறைவேற்றிவிட வேண்டும் என டெல்லி அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. குற்றவாளிகள் தரப்பிலிருந்து இதுவரை தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள், கருணை மனுக்கள் ஆகிய அனைத்தும் நிராகரிக்கப்பட்டன.
குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் தனது கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பிவிட்டு, தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றத்தில் கோரிக்கைவைத்தார். ஆனால் குடியரசுத் தலைவர் உடனடியாகக் கருணை மனுவை கடந்த 17ஆம் தேதி நிராகரித்தார். இதையடுத்து அவரது மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து தன் கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக முகேஷ் சிங் கடந்த சனிக்கிழமை (ஜனவரி 25) உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு அவரது வழக்கறிஞர், கோரிக்கை வைத்தையடுத்து ஜனவரி 28ஆம் தேதி நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன், போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது.
இதையடுத்து கருணை மனு நிராகரிப்புக்கு எதிரான நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தது சரியே என தெரிவித்த நீதிமன்ற அமர்வு, முகேஷ் சிங் தாக்கல் செய்த மனுவை நேற்று (ஜனவரி 29) தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், இவ்வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான அக்சய் குமார் (31) சார்பில், தமக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இன்று கடைசி நிவாரண மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் இவ்வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா தனது தண்டனையை ரத்து செய்யக்கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு நேற்று (ஜனவரி 29) கருணை மனு அனுப்பியுள்ளார் என அவரது வழக்கறிஞர் ஏ.பி. சிங் தெரிவித்திருந்தார். இதையடுத்து இவர்களுக்கு வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜார்க்கண்டில் ஏழுபேர் கொல்லப்பட்டது குறித்த அறிக்கை ஜே.பி. நட்டாவிடம் சமர்பிப்பு