ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதியை மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி நீக்கியது. தொடர்ந்து அங்கு சில கட்டுப்பாடுகளையும் விதித்தது.
மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இணைய சேவையும் முடக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம்நபி ஆசாத் இது தொடர்பாக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த மனுவில், ஜம்மு காஷ்மீரில் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனை நீக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் என்.வி. ரமணா, சுபாஷ் ரெட்டி, பி.ஆர். காவை ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் கடந்தாண்டு நவம்பர் 21ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
தொடர்ந்து 27ஆம் தேதி நடந்த விசாரணையின்போது நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று (ஜன10) வெளியானது. தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், “ஜம்மு காஷ்மீரில் இணையதள முடக்கத்தை நீக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “தகவல் தொடர்பு பொதுமக்களின் உரிமை” எனக் கருத்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்தை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு