உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு, கைதிகளுக்கு தற்காலிக விடுப்பு மற்றும் பிணை வழங்குவது குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு உயர்மட்டக் குழுவை அமைக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
மத்திய சிறைச் சாலைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதையும், சிறைகளில் கரோனா பெருந்தொற்று பரவாமல் தடுக்கவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இன்று ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் மாநிலங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கைகள் குறித்து ஆராயப்பட்டன. அந்த அறிக்கையில், சிறைச் சாலைகளில் கூட்ட நெரிசலை சமாளிக்க மாநில அரசுக்கு அதிகாரங்கள் வழங்குவது குறித்த கோரிக்கை வைக்கப்பட்டது.
சிறையினுள் எந்தவொரு நோய் வாய்ப்பட்ட கைதிகள் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்க மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கைதிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் தொலைபேசி மூலம் பேச அனுமதிக்கப்படுவர் என்றும் வெளியில் இருந்து யாரும் கைதிகளைச் சந்திக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 4ஆம் தேதி வரை செயல்பாடு நிறுத்தம்... வீடியோ கான்பிரன்சிங்கில் அவசர வழக்குகள் விசாரிப்பு!
சிறைச்சாலைகளுக்குள் போதுமான எண்ணிக்கையிலான சிறை மருத்துவமனைகளும், மருத்துவர்களும் உள்ளனர். அதுமட்டுமில்லாமல் மாலை நேரத்தில் யோகாவும், பிற உடற்பயிற்சி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை முற்றிலும் தவிர்த்து விடாமல், சரியான கண்காணிப்பில் இவைகள் பின்பற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே பரிந்துரைக்கையில், சிறைச்சாலைகளில் நிறைய வெளிநாட்டு கைதிகள் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் போதை மருந்து கடத்தல், பொருள் கடத்தலில் சுங்கத் துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள் என்று கூறிய அவர், இந்த கைதிகளை அவர்களது உறவினர்கள் யாரும் சந்திக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், தேவைப்பட்டால் சிறை நிர்வாகம் காணொலி காட்சி மூலம் உரையாடல்களை மேற்கொள்ள வசதி ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.