குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் கரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளித்துவரும் உதய் சிவானந்த் தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் நவ.27ஆம் தேதியன்று அதிகாலை 1.30 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அந்த மருத்துவமனையில் மொத்தம் 33 கரோனா தொற்றாளர்கள் சிகிச்சைப் பெற்றுவந்தனர். அவர்களில் 7 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு தீ பரவியதன் காரணமாக 5 பேர் அதில் சிக்கி உயிரிழந்தனர். 28 கரோனா நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட நோயாளிகள் வேறு கோவிட்-19 மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்தத் தீ விபத்து பற்றி தகவலை செய்திகள் மூலம் அறிந்த உச்ச நீதிமன்றம், இந்தச் சம்பவத்தை தானே முன்வந்து பொது நலன் வழக்காக பதித்து விசாரித்து வருகிறது. முன்னதாக, நவ.27ஆம் தேதியன்று நடைபெற்ற விசாரணையின்போது, இது தொடர்பாக டிசம்பர் 1ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இவ்வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர் ஷா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக இன்று (டிச.1) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா குஜராத் அரசின் அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதனை ஆராய்ந்த நீதிமன்றம், “கோவிட் - 19 தொற்றாளர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. அதேபோல, இறந்தவர்களின் உடல்கள் கண்ணியமாக கையாளப்படுவதில்லை என தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இது முதல் சம்பவம் அல்ல. இந்த சம்பவத்திற்கு முன் பல உயிரிழப்புகள் இதே வகையில் நடைபெற்றுள்ளதை நாங்கள் அறிந்திருக்கிறோம். இதுபோன்ற தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் சம்பவங்கள் தொடர்பாக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ராஜ்கோட் மருத்துவமனையில் நடந்த ஒரு தீ விபத்து குறித்து குஜராத் அரசு அளித்துள்ள அறிக்கை திருப்திகரமானதாக இல்லை. குஜராத் அரசின் பதிலில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் உள்ளன. எனவே, இது தொடர்பாக முழுமையான அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
முன்னதாக, ராஜ்கோட் கரோனா மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்து குஜராத் அரசின் அலட்சியமே காரணமென உச்ச நீதிமன்றம் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : வீடியோ கான்பரன்சிங் விசாரணையில் மேலாடை இன்றி தோன்றிய வழக்குரைஞர்; உச்ச நீதிமன்றம் அதிருப்தி!