உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து அப்போது ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அதிருப்தி அணியினர் சர்ச்சையை கிளப்பினர்.
இதனையடுத்து, 2017ஆம் ஆண்டு இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்தது.
இந்த ஆணையம் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா நடராஜன் உள்ளிட்ட 154 பேரிடம் விசாரணையை மேற்கொண்டது.
இதனிடையே, அப்பல்லோ டாக்டர்களின் சாட்சியம் தவறாக பதிவு செய்யப்படுவதாகக் கூறி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று அப்பல்லோ நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரம் மாதம் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு இன்று (செப் 23) விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு அரசின் கோரிக்கை தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் பதில் தாக்கல் செய்ய அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3 மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவோடு அமைக்கப்பட்ட இந்த விசாரணை ஆணையத்திற்கு இதுவரை 7 முறை கால அவகாசம் வழங்கி தமிழ்நாடு அரசு நீட்டித்தது குறிப்பிடத்தக்கது.