கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு திண்டாடி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, வேறு மாநிலங்களுக்கு சென்று பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை இன்னும் மோசமாகியுள்ளாது. பெரும்பாலான மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே புலம்பெயர் தொழிலாளர்களுக்கான உணவு, தங்குமிடம் ஆகியவை குறித்த வழிகாட்டுதலை நீதிமன்றம் வகுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு நீதிபதி எஸ்.கே. கவுல் அமர்வுக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இதுகுறித்த விசாரணையில் அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, ''மக்கள் யாரேனும் உணவின்றி தவித்துவந்தால் அவர்களுக்கான அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அழைத்த ஒரு மணி நேரத்தில் உணவு வழங்கப்படுகிறது'' என்றார்.
இதையடுத்து வழக்கை தாக்கல் செய்த பிரஷாந்த் பூஷன், ''இதுவரை நாட்டில் பலரும் உணவின்றி தவித்து வருகின்றனர். மகளிருக்கான ஜன்தன் வங்கிக் கணக்கில் வழங்கப்பட்டுள்ள ரூ. 500 போதுமானதாகவும் இல்லை.
தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான நிறுவனங்களிடம் ஊதியம் வழங்கவே பணமின்றி உள்ளனர். 89 விழுக்காடு மக்கள், ஊரடங்கு காலத்தில் ஊதியமின்றி தவித்து வருகின்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் உணவு, தங்குமிடமின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவ சரியான வழிக்காட்டுதலை நீதிமன்றம் வழங்க வேண்டும்'' என்றார்.
இதையடுத்து புலம்பெயர் தொழிலாளர்கள் விஷயத்தில் உச்ச நீதிமன்றம் எந்த வழிக்காட்டுதலையும் வழங்காது. அதனை மத்திய அரசின் கைகளுக்கே விட்டுவிடுகிறோம் என உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: சாப்பாட்டுக்காக சாலையில் திரியும் மக்கள்!