வழக்கு
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அரசியலமைப்புச் சட்டமாக அறிவிக்கக் கோரியும் அனைத்து மாநிலங்களும் அதனை உடனடியாக அமல்படுத்தக் கோரியும் வழக்குரைஞர் வினீத் தன்டா (Vineet Dhanda) என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதனை அவசர வழக்காக விசாரிக்கவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, நீதிபதிகள் பி.ஆர். காவை, சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
விசாரிக்க மறுப்பு
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்து விட்டனர். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், “ஒரு சட்டத்தின் காலத்தை நிர்ணயிப்பது நீதிமன்றத்தின் வேலை. மாறாக அதனை அரசியலமைப்புச் சட்டமாக அறிவிப்பது இல்லை” என கூறினர்.
மேலும், “நாட்டில் இவ்வளவு வன்முறைகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வன்முறைகள் நிறுத்தப்பட்ட பின்னரே, இந்த வழக்கு குறித்து விசாரிக்க முடியும்” எனவும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.
மத்திய அரசின் வாதம் நிராகரிப்பு
பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ், ஜாமியா மஸ்ஜித் உலமா இ இந்த், அனைத்திந்திய அசாம் மாணவர்கள் சங்கம், அமைதிக் கட்சி, மார்க்சிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், ஒவைசி என 59 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த மனுவில், “குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
இந்த மனுக்களை கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது மத்திய அரசின் வழக்குரைஞர், குடியுரிமை திருத்தச் தொடர்பாக மாநில உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று வாதாடினார்.
நாளை விசாரணை
ஒவ்வொரு மாநிலத்திலும் மத்திய அரசின் வழக்குரைஞர்கள் ஆஜராகி வாதாடுவதில் சிரமம் உள்ளது என்று அவர் காரணம் கூறினார். மத்திய அரசின் வழக்குரைஞரின் இந்த காரணத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர்.
மேலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆய்வுக்குட்படுத்துவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை (ஜன10) மீண்டும் விசாரணைக்கு வருகிறது என்பது நினைவுகூரத்தக்கது.
குடியுரிமை திருத்தச் சட்டம்
அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மததுன்புறுத்தல் காரணமாக 2014 டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்னர் இந்தியாவுக்கு அகதிகளாக வந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை கிடைக்க குடியுரிமை திருத்தச் சட்டம் வழிவகை செய்கிறது.
இந்த சட்டத்துக்கு எதிராக தலைநகர் டெல்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு போராட்டங்களில் தீவிர போராட்டம் நடைப்பெற்றது. இந்த போராட்டங்களில் 19 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சர்வாதிகாரத்தை அகிம்சை மூலம் எதிர்கொள்ள வேண்டும் - சரத் பவார்