சென்னை: ஜனவரி 18 ஆம் தேதி நடைபெறவுள்ள விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சிக்கு வருபவர்கள் குறிப்பிட்ட தளத்தில் முன்பதிவு செய்துள்ள டிஜிட்டல் டிக்கெட்டுகளை வைத்து மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, ''விஜய் ஆண்டனி 3.0'' சென்னை, AM ஜெயின் கல்லூரி மைதானத்தில், 28.12.2024 அன்று நடைபெறவிருந்த “Vijay Antony 3.0 - இன்னிசை கச்சேரி”வருகின்ற 18.01.2025 (சனிக்கிழமை) YMCA மைதானம், நந்தனத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தென்னிந்தியாவின் முன்னணி ஊடக தயாரிப்பு நிறுவனமான Noise and Grains Private Limited உடன் இணைந்து கட்டணமில்லா பயணத்தை வழங்குவதற்காக ஏற்பாடு செய்துள்ளது. அதன் அடிப்படையில் விஜய் ஆண்டனி இன்னிசை கச்சேரிக்கு வருபவர்கள் ஜனவரி 18ஆம் தேதி மெட்ரோவில் பயணிப்பது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தங்களது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளனர்.
“Insider” or “District” தளங்கள் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டிஜிட்டல் டிக்கெட்டுகளுடன் நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு மட்டுமே இந்த ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணம் வழங்கப்படும். இந்த முன்பதிவு செய்யப்பட்ட டிஜிட்டல் டிக்கெட்டுகளை பயன்படுத்தி பயணிகள் எந்த ஒரு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்தும் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு மிக அருகில் உள்ள நந்தனம் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு சென்று திரும்ப முடியும்.
“விஜய் ஆண்டனி 3.0” கச்சேரிக்கு வருபவர்களுக்கு தடையில்லா மெட்ரோ பயணம்
— Chennai Metro Rail (@cmrlofficial) January 13, 2025
சென்னை, AM ஜெயின் கல்லூரி மைதானத்தில், 28.12.2024 அன்று நடைபெறவிருந்த “Vijay Antony 3.0 - இன்னிசை கச்சேரி”வருகின்ற 18.01.2025 (சனிக்கிழமை) YMCA மைதானம், நந்தனத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும்…
சிறப்பு சலுகை
நிகழ்வில் பங்கேற்பவர்கள் தங்கள் முன்பதிவு செய்யப்பட்ட டிஜிட்டல் டிக்கெட்டுகள் உள்ள தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு சலுகை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம்.
டிசம்பர் 28, 2024 அன்று நடைபெறவிருந்த நிகழ்வுக்கு வழங்கப்பட்ட ஸ்பான்சர் செய்யப்பட்ட மெட்ரோ பாஸ்கள் இனி செல்லுபடியாகாது. புதிதாக வழங்கப்பட்ட ஸ்பான்சர் செய்யப்பட்ட மெட்ரோ பாஸ்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். நிகழ்ச்சி பங்கேற்பாளர்களின் கவனத்திற்கு, நந்தனம் மெட்ரோ நிலையத்திலிருந்து கடைசி மெட்ரோ ரயில் 00:15 மணிக்கு விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலைய மெட்ரோ நிலையம் நோக்கி புறப்படும்.
பச்சை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் (ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வடபழனி, அரும்பாக்கம், புரட்சித்தலைவி டாக்டர். ஜெ. ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ, கோயம்பேடு, திருமங்கலம், அண்ணாநகர் கோபுரம், அண்ணாநகர் கிழக்கு, செனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா, எழும்பூர்) புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் (நடைமேடைகள் 1 & 2) வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம்.
10 நிமிடங்களுக்கு முன்பு வரவும்
பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்லும் பயணிகள் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில் (நடைமேடை 3) வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம். பயணிகள் கடைசி மெட்ரோ ரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வாகன நிறுத்துமிடம்:
பயணிகளின் வசதிக்காக அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் போதுமான வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன. நிலையான வாகன நிறுத்தம் கட்டணம் பொருந்தும் என தனது எக்ஸ் தளத்தின் மூலம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.