மதுரை: பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை மலர் சந்தையில் மல்லிகைப்பூ ஒரு கிலோ 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது வரத்து ஓரளவிற்கு அதிகமாக உள்ளதால், விலை நிலவரம் சுமாராக உள்ளது. ஒருவேளை குறைய தொடங்கினால் நான்காயிரம் ரூபாயை எட்டலாம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம். இங்கு வாடிப்பட்டி, கொட்டாம்பட்டி, தும்பைப்பட்டி, மேலூர், ஆவியூர், சிலைமான், பாலமேடு, அலங்காநல்லூர், உசிலம்பட்டி உள்ளிட்ட மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
அதுமட்டுமன்றி அண்டை மாவட்டங்களான விருதுநகர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய பகுதிகளில் இருந்தும் பல்வேறு வகையான பூக்கள் இங்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. மதுரை மல்லிகையை பொறுத்தவரை அதன் தனித்தன்மை மணம் தரம் காரணமாக மதுரையில் இருந்து சிங்கப்பூர், துபாய், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
அதன் காரணமாக மதுரை மல்லிகையின் விலை கணிசமாக எப்போதும் உயர்ந்தே காணப்படுவது வழக்கம். இந்நிலையில் தமிழர்களின் தனித்திருநாளாக போற்றப்படும் தைப்பொங்கல் திருவிழா நாட்களை முன்னிட்டு மதுரை மலர் வணிக வளாகத்தில் பூக்களின் விற்பனை கணிசமாக உள்ளது.
இதையும் படிங்க: பொங்கல்: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு படையெடுத்த மக்கள்!
மதுரை மலர் சந்தையில் பூக்களின் இன்றைய விலை நிலவரம்:
- மதுரை மல்லி ரூ.2,000
- மெட்ராஸ் மல்லி ரூ.1,800
- பிச்சி ரூ.2,000
- முல்லை ரூ.2000
- செவ்வந்தி ரூ.200
- சம்பங்கி ரூ.300
- செண்டு மல்லி ரூ.60
- கனகாம்பரம் ரூ.1,500
- ரோஸ் ரூ.250
- பட்டன் ரோஸ் ரூ.300
- பன்னீர் ரோஸ் ரூ.500
- கோழிக்கொண்டை ரூ.100
- அரளி ரூ.400
- தாமரை (ஒன்றுக்கு) ரூ.35
இதுகுறித்து மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன் கூறுகையில், "பொங்கல் திருநாள் என்பதால் பூக்களின் விலை சற்று அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக மதுரை மல்லி ஓரளவிற்கு வரத்து அதிகமாக உள்ளது. இல்லாவிடில் இந்நேரம் மல்லிகை கிலோ ரூ.4 ஆயிரத்தை தொட்டிருக்கும். வரத்து குறைவாக உள்ள முல்லை, பிச்சி, ஆகிய பூக்களின் விலை கணிசமான விலையேற்றம் கண்டுள்ளது. அடுத்த ஓரிரண்டு நாட்கள் இதே விலை நீடிக்க வாய்ப்பு. பொங்கல் பண்டிகை என்பதால் பூக்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.