சமூக ஆர்வலர் ஹாஷிம் தயிகண்டி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “ கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரழந்த குறிப்பாக பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள மக்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு வழங்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான குழு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசத்திற்காக கடமைகளை நிறைவேற்றும்போது நாட்டில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அதன் குடிமக்களின் நலன்களையும் வாழ்க்கையையும் பாதுகாப்பது அரசின் கடமை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனைக் கேட்ட நீதிபதிகள், ஒவ்வொரு மாநிலமும் அதன் நிதி மற்றும் பிற காரணிகளின் அடிப்படையில் வேறுபட்ட கொள்கையைக் கொண்டிருக்கிறது. அவை அனைத்தும் ஒரு திசையில் இருக்க முடியாது.
எனவே, கரோனா தொற்றுக்கு உள்ளான குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க முழு நாட்டிற்கும் வழிகாட்டுதல்களை வழங்குமாறு மத்திய, மாநில அரசுக்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.