முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் 50 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதனை எதிர்த்து எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்றும், கடலோர ஒழுங்குமுறை விதிகளை மீறி நினைவிடம் அமைக்கப்படுவதாகவும் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தடை விதிக்க முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக எம்.எல்.ரவி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்நிலையில், மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ’ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டும் பிரச்சனையில் நாங்கள் தலையிட முடியாது’ என்று கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.