புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சி மூத்த நிர்வாகி திருநாவுக்கரசர், '' அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது, காட்டுமிராண்டித் தனமானது. குற்றவாளி கைது செய்யப்பட்டிருந்தாலும், முறையாக எந்தெந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டுமோ, அந்த பிரிவின் கீழ் வழக்கு செய்து, முறையான விசாரணை நடத்தி தண்டனையை உரிய காலத்தில் பெற்று தர வேண்டும். இதுபோன்று அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் பிரச்சனையை வைத்துக்கொண்டு சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூற முடியாது.
ஏன் முன்கூட்டியே கண்காணிக்கவில்லை
இருப்பினும் காவல்துறை இதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளி எந்த கட்சியாக இருந்தாலும், எந்த சாதியாக இருந்தாலும் அவர் குற்றம் புரிந்தவர் தான்; இதில் பாகுபாடு பார்க்க முடியாது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நபர் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. அப்படி இருந்தும் காவல் துறை ஏன் அவரை முன்கூட்டியே கண்காணிக்கவில்லை கைது செய்யவில்லை. இனிவரும் காலங்களில் பல்கலைக்கழக வளாகங்களில் துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கனவே உள்ள சட்டங்களை கடுமையாக்க வேண்டும். மேலும், வழக்கு நிலுவைகள் அதிகமாக இருப்பதால் வழக்கில் தீர்வுகள் கிடைப்பதற்கு காலதாமதம் ஆகிறது. எனவே எந்த நீதிமன்றமாக இருந்தாலும் சரி, ஒரு வழக்கை ஒரு கால வரையறைக்குள் முடிக்க வேண்டும். தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்ற கால நிர்ணயத்தை செய்ய வேண்டும். அப்போது தான் தண்டனைகள் விரைவாக கிடைக்கும்.
விஜய்
விஜய் கட்சி தொடங்கியதால் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் என்று கூற முடியாது. அவர் தற்போது தான் கட்சி தொடங்கி மாநாடு நடத்தியுள்ளார். இன்னும் ஓராண்டுக்குள் கட்டமைப்பை பலப்படுத்தி, தேர்தல் பணியை அவர் தொடங்க வேண்டும். அவர் பணி செய்யும்போது மற்றவர் தூங்கவா போகிறார்கள். மற்றவர்களும் வேகமாக களப்பணி செய்வார்கள். எல்லா தேர்தலுமே கடைசி கட்சிகளுக்கு முக்கியமானவை தான்.
அண்ணாமலை
அண்ணாமலை காலணி அணியாமல் இருப்பதால் திமுக ஆட்சியை அகற்றி விட முடியுமா? அண்ணாமலைக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. காலணி அணியாமல் இருந்தால் காலுக்கும், உடலுக்கும் நல்லது என்று யாராவது சொன்னார்களா என்று தெரியவில்லை. இதுபோன்று அவர் பேசுவது வேடிக்கையாக தான் இருக்கிறது. இதுதான் போராட்டம் யுக்தியா. அண்ணாமலை நீண்ட நாள் வாழ வேண்டும். அவர் தமிழகத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம்.
அரசியலுக்காக உங்க ஆட்சியில் இது சரியில்லை என்று ஒருவருக்கொருவர் குற்றம் காட்டுவது சகஜம் தான். ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது ஒவ்வொரு கட்சியும் கொள்கையாக கூறினாலும், தமிழகத்தில் இது சாத்தியமில்லாமால் தான் உள்ளது. திமுக அருதிப்பெரும்பான்மையோடு தான் தான் 2021-இல் ஆட்சியை பிடித்துள்ளது. 2026 தேர்தலிலும் திமுக அருதிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
ஈரோடு இடைத்தேர்தலில் இரண்டு முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஆகையால் காங்கிரஸ் கட்சி போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸார் நினைக்கின்றனர். ஆனால், திமுகவினர் இரண்டு முறை காங்கிரசுக்கு நாம் தொகுதியை விட்டுக் கொடுத்து விட்டோம், இந்த முறை திமுக போட்டியிட வேண்டும் என்று அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை நினைக்கின்றனர். ஆனால், இறுதி முடிவு முதல்வர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் முடிவு செய்வார்கள். முதல்வர் ஏற்கனவே கூறிவிட்டார். திமுக கூட்டணி ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெறும் என்றார்.
மேலும், அதிமுக 200 இடங்களில் வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி வருவதற்கு பதில் அளித்த திருநாவுக்கரசர், கனவு காண்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. இந்தியாவில் பல மாநில ஆளுநர்கள் மாற்றப்பட்டுள்ளனர். ஆனால் தமிழக ஆளுநர் மாற்றப்படவில்லை. மத்திய அரசு தமிழகத்தில் ஆர்என்.ரவி இருக்க வேண்டும் என்று நினைத்து விட்டனர். அவரை வைத்து தமிழக அரசிற்கு குடைச்சல் கொடுக்க வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டதால் தான் தமிழக ஆளுநர் மாற்றப்படவில்லை'' என கூறினார்.