கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மக்களவையில் 10-க்கும் மேற்பட்ட சட்ட முன்வடிவுகளை மத்திய அரசு தாக்கல்செய்திருந்தது.
அதில், அத்தியாவசிய பொருள்கள் (திருத்த) மசோதா 2020, உழவர் உற்பத்தி வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா 2020, விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு அளித்தல்) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா 2020 ஆகிய மூன்று புதிய வேளாண் சட்ட முன்முடிவுகளும் அடங்கும்.
மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மூன்று சட்ட முன்வடிவுகளை காங்கிரஸ், டி.எம்.சி., திமுக, மதிமுக, விசிக, ஆர்.ஜே.டி., சிபிஐ, சிபிஐ (எம்) உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் 'உழவர்களுக்கு எதிரான சதி' எனக் கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
மத்திய அரசின் இந்தச் சட்ட முன்வடிவுகளைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றுவந்த நிலையில் அவற்றுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து சட்ட அங்கீகாரம் வழங்கினார்.
இதனையடுத்து, இந்தச் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்றும் மீறி திணித்தால் வேளாண் சட்டங்களைப் புறக்கணிப்போம் என்றும் கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் போன்ற மாநில அரசுகள் கூறிவருகின்றன.
இந்நிலையில், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக அமல்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கக் கோரி இந்து தர்ம பரிஷத் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது.
அம்மனுவில், "மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்திவரும் அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவற்றுக்கு எதிராக சமூக வலைதளங்களில் எழுதவும், பேசவும் தடைவிதிக்க வேண்டும்.
அத்துடன், அந்தப் புதிய சட்டங்களை உடனடியாக அமல்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்" எனக் கோரியிருந்தார். இந்த மனுவானது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வுக்கு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், "மனுதாரர் இத்தகைய முறையில் நீதிமன்றத்தை அணுக முடியாது. எனவே, புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக அமல்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கக் கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது" என உத்தரவிட்டனர்.