உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற கிராமத்தில் 19 வயது மதிக்கத்தக்க பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தார்.
அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் காவல் துறையினரே தகனம் செய்ததால் இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அப்பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட நான்கு பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர். இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி உத்தரப் பிரதேச அரசு பரிந்துரை செய்துள்ளது.
இந்நிலையில், ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை குறித்த விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர் சத்தியாமா துபே என்பவர் தொடர்ந்த வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, வி. ராமசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
அப்போது, சாட்சியங்களைப் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அக்டோபர் 8ஆம் தேதிக்கு முன்பு விளக்கமளிக்க உத்தரப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கொடூரமானது என்றும் அசாதாரணமானது என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
உத்தரப் பிரதேச அரசின் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான அரசின் துணைத் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, "இச்சம்பவம் குறித்து கற்பனை கலந்த கதை பொதுவெளியில் பரப்பப்பட்டுவருகிறது, இது நிறுத்தப்பட வேண்டும்.
உள்நோக்கத்துடன் தவறான தகவல்கள் பரப்பப்படுவதை நிறுத்த உறுதிப்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ இந்த வழக்கின் விசாரணையை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.