டெல்லியில் 140 கிமீ தொலைவு ரயில்வே பாதை அமைந்துள்ளது. இப்பகுதிகளில் உள்ள 48,000 குடிசைகளை மூன்று மாதங்களுக்குள் அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில், அரசியல் தலையீடு இருக்கக் கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ரயில்வே பாதைகளில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்திருந்த நிலையில், அருண் மிஸ்ரா, பி.ஆர். கவாய், கிருஷ்ண முராரி ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்படுவுள்ள நடவடிக்கைகள் குறித்து இன்னும் ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், "ஆக்கிரமிப்புகளை அகற்றும் நோக்கில் சம்பந்தப்பட்ட துறைகள் திட்டத்தை வகுக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட மண்டலங்களில் மூன்று மாத காலத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இதில், அரசியல் தலையீடு இருக்கக் கூடாது. இந்த உத்தரவுக்கு எந்த நீதிமன்றமும் தடை விதிக்கக் கூடாது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு தடை விதித்தால் அது செல்லுபடியாகாது" என்றனர்.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில், ”டெல்லியை சுற்றியுள்ள வடக்குப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை குறித்த திட்டத்தை ரயில்வே துறை வகுக்க வேண்டும். இதனைக் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிடப்பட்டபோதிலும், இணையதளத்தில் இன்றே (செப்.03) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போட்டியின்றி திமுக பொதுச்செயலாளராகும் துரைமுருகன்