ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு தகுதி வழங்கும் சட்டப்பிரிவுகளை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி மத்திய அரசு திரும்பப்பெற்றது. அத்துடன் அம்மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. அதனையடுத்து மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் சட்டப்பேரவை அல்லாத லடாக் என்ற யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் என்ற தகுதிக்குள் கொண்டுவரப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாநிலத்தில் பல்வேறு சட்டவிதிகள் மற்றும் தடைகள் அமலுக்கு வந்தன. இணையம் மற்றும் தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டது. ஸ்ரீநகர் உள்ளிட்ட அம்மாநிலத்தின் பல பகுதிகள் முள்வேலிகளால் சுற்றி வளைக்கப்பட்டன. நகரத்தின் முக்கிய வழித்தடங்களில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கடந்த ஓராண்டிற்கும் மேலாக இந்நிலை தொடர்கிறது. இதன் ஒரு பகுதியாக, அங்கு இணைய பயன்பாடுகளும் தடைசெய்யப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இதனை எதிர்த்து ஊடக வல்லுநர்களுக்கான அறக்கட்டளை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று (ஆகஸ்ட் 7) மீண்டும் நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஹுசெபா அஹ்மதி, "4 ஜி சேவைகளை மீண்டும் வழங்குவது தொடர்பாக ஆளுநர் ஊடகங்களில் அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். அதற்கான பரிந்துரைகளையும் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனவே, ஜம்மு-காஷ்மீரின் தகவல் தொழிற்நுட்பத்துறையின் தலைவர், 4 ஜி இணைய சேவையை வழங்கலாம் என்று கூறினால் அரசு அதனை பின்பற்ற வேண்டும்" என வலியுறுத்தினார்.
அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் (அட்டர்னி ஜெனரல்) கே.கே.வேணுகோபால் மற்றும் மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் (சொலிசிட்டர் ஜெனரல்) துஷார் மேத்தா ஆகியோர், "தற்போது ஜம்மூ-காஷ்மீருக்கு புதிய துணைநிலை ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். முந்தைய ஆளுநருன் நிலைப்பாடு தொடர்பாக அவர் ஆய்வு செய்து, தற்போதைய சூழலை கவனத்தில் கொண்டு இணைய சேவை வழங்கல் தொடர்பாக அவர் தனது முடிவெடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் ஒரு பதிலை தாக்கல் செய்ய வேண்டும்" என கால அவகாசம் கோரினர். இதற்கு மனுதாரர் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள துணைநிலை ஆளுநரின் அறிக்கையை நீதிமன்றம் நம்பியிருக்கிறது. முன்னாள் ஆளுநர் மாற்றப்பட்டதால் புதிய ஆளுநரின் பதிலுக்காக இன்னும் இரண்டு நாள்கள் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது. இந்த விவகாரம் மேலும் விசாரணைகளுக்கு ஒத்திவைக்கப்படாது என துஷார் மேத்தாவுக்கு தெரிவிக்கப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீரின் எந்தெந்த பகுதிகளில் 4 ஜி இணைய சேவையை மீட்டெடுக்க முடியும் என்பது குறித்து மத்திய அரசின் பதிலை பெற்றுதர வேண்டும்" என கூறினார். இந்த வழக்கின் மீதான விசாரணை ஆகஸ்ட் 11ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.