டெல்லி: விஜய் மல்லையா தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை ஆகஸ்ட் 20ஆம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவை மீறி தனது குடும்பத்தினருக்கு சட்ட விரோதமாக பணத்தை பரிமாற்றியதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 2017ஆம் ஆண்டு தன்னைக் குற்றவாளி என்று அளிக்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்ய மல்லையா கோரியிருந்தார்.
தொழிலதிபர் விஜய் மல்லையா தாக்கல் செய்த மனு, மூன்று ஆண்டு காலமாக சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஏன் முன்வைக்கப்படவில்லை என்பதை விளக்குமாறு உச்ச நீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டிருந்தது.
ஜூன் 16ஆம் தேதி மல்லையாவின் மறுசீராய்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் யு.யூ. லலித், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு, கடைசியாக மறுசீராய்வு மனு தொடர்பான கோப்பை கையாண்ட அலுவலர்களின் பெயர்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வழங்குமாறு உத்தரவிட்டது.
மேலும், இந்தக் கோப்புகள் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது சமர்ப்பிக்கவேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கிங்ஃபிஷர் நிறுவனர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளிடம் ரூ.9,000 கோடிக்கு மேல் கடனாகப் பெற்றுத் திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டே தப்பியோடினார். இந்தியாவின் பல்வேறு நீதிமன்றங்களில் இவர் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன. மும்பை சிறப்பு நீதிமன்றம் விஜய் மல்லையாவைத் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளியாக அறிவித்துள்ளது.