இந்த மாதத்தின் மத்தியில் (ஜூன்15-16ஆம் தேதிகளில்) இந்திய சீன வீரர்கள் இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் வன்முறை வெடித்தது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இதில், பஞ்சாப் படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் குர்தேஜ் சிங், குர்பிந்தர் சிங் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த வீரர் அன்குஷ் ஆகியோரும் உயிர் தியாகம் செய்திருந்தனர்.
இவர்கள் மூவருக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ராம்கார்க் பகுதி எஸ்பிஐ கிளையில் சம்பளக் கணக்கு வைத்திருந்தனர். இந்நிலையில், இந்த மூன்று வீரர்களும் திருமணமாகாதவர்கள் என்பதால், காப்பீட்டுத் தொகை அவர்களின் தாய்மார்களுக்கு வழங்கப்பட்டது.
இது குறித்து ராம்கார்க் எஸ்பிஐ தலைமை மேலாளர் ராகுல் குமார் கூறுகையில், “எஸ்பிஐ வங்கிக் கணக்கில் சம்பளக் கணக்கு வைத்திருந்த மூவரும் தலா ரூ.30 லட்சம் காப்பீட்டுக்கு தகுதியுடையவர்கள். இந்தப் பணம் அவர்களின் தாய்மார்களிடம் வழங்கப்பட்டது” என்றார்.
மேலும், “கல்வான் தாக்குதலில் இந்த மூன்று வீரர்களும் கொல்லப்பட்டனர் என்று அறிந்ததும் மனவேதனை அடைந்தோம். அவர்களுக்கு சேர வேண்டிய காப்பீட்டு தொகை குறித்த நடைமுறைகளை ஒரு வாரத்துக்குள் முடித்தோம்” என்றார்.
இதையும் படிங்க: 'மகாராஷ்டிராவின் கரோனா சரத் பவார்': பாஜக எம்எல்சி மீது வழக்குப்பதிவு!