தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஊரடங்கு நேரத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தையும் கடந்து கடைகளைத் திறந்து வைத்திருந்ததாகக் கூறி, காவல் துறையினர் அவர்களை விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து, நீதிமன்றக் காவலில் இருந்த இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர்.
இதனையடுத்து, நீதிமன்றக் காவலில் இருந்த தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கிய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, காவல் துறையின் தாக்குதலாலேயே இருவரும் உயிரிழந்தனர் எனக் கண்டறிந்தது.
இதையடுத்து, சிபிசிஐடி(குற்றப்பிரிவு - குற்றப்புலனாய்வுத்துறை)க்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில், சம்பந்தப்பட்ட காவல் துறையினர் சிலர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-யிடம் ஒப்படைப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. பின்னர், வழக்கை ஏற்றுக்கொண்ட சிபிஐ தற்போது, இந்த வழக்குத் தொடர்பாக இரண்டு புதிய வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
இதற்கிடையில், சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு தந்தை - மகன் உயிரிழந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து காவலர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என ஒரு தனியார் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், 'தன்னுடைய குடும்பத்தில் இரண்டு உறுப்பினர்களை இழந்தவர்களுக்கு உரிய நீதி பெற்றுத்தரவேண்டும். காவல் நிலையங்களில் நடைபெறும் சித்ரவதைகள், பாலியல் துன்புறுத்தல்கள் போன்றவற்றிற்கு எதிரான நடவடிக்கைகளை நீதிமன்றம் உறுதி செய்யவேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தது.