உலகம் முழுவதும் கரோனா அச்சுறுத்தலினால் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தனது மாநில மக்களின் நலனுக்காக நிர்வாக ரீதியிலான புதிய முயற்சி ஒன்றினை எடுத்துள்ளார்.
கரோனா பெருந்தொற்றிலிருந்து மாநில மக்களைப் பாதுகாக்கவும், மீட்டெடுக்கவும் மத்திய அரசுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது ஒடிசா அரசு.
இந்நிலையில், அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
மத்திய, மாநில அரசுகளின் கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அடித்தட்டு மக்களையும் முழுமையாகச் சென்றடைய மாவட்ட ஆட்சியரின் அதிகாரங்களை கிராம பஞ்சாயத்துகளுக்கும் பகிர்ந்தளிப்பதாகக் கூறியதுதான் அது.
மாவட்ட ஆட்சியர்களின் தலைமையிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒருபுறம் துரிதமாக நடைபெற்றுவந்திருந்தாலும், கிராம மக்களின் அடிப்படைத் தேவைகளும், சிரமங்களும் பஞ்சாயத்து சார்ந்த ஊழியர்களுக்கே தெரிய வாய்ப்புள்ளது.
மேலும், அவர்கள் மக்களை நேரடியாகத் தொடர்புகொள்ளும் சாத்தியக்கூறுகளும் அதிகளவில் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அதிகாரங்களை கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
முன்னதாக வெள்ளம், புயல், சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்களிலிருந்து மக்களைக் காக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள நிலையில் தற்போது அறிவித்துள்ள இந்த அதிகாரப் பகிர்ந்தளிப்பு பெரும்பாலான மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் ஒடிசா மாநிலத்திலிருந்து வெளிமாநிலங்களில் தங்கியுள்ள மக்களுக்கும் எளிதாக உதவ இலவச எண்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
அதுமட்டுமின்றி, வெளி மாநிலங்களிலிருந்து திரும்பியவர்களை 14 நாள்கள் தனிமைப்படுத்தவும், அவர்களுக்குத் தங்குமிடம், உணவு, இரண்டாயிரம் ரூபாய் நிவாரண நிதி அளிக்கவும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு 4 மாத ஊதியம் முன்பே வழங்கப்படும் - ஒடிசா முதலமைச்சர்