உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சோட்டெ லால் திவாகர். இவர், கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பாக போட்டியிட்டவர்.
இந்நிலையில், 100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சாலை அமைப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக சோட்டெ லால் திவாகர் மற்றும் அவரது மகன் சுனில் திவாகர் ஆகியோர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், ”திவாகரும் அவரது மகனும் சாலை சீரமைப்பு பணி குறித்து ஆராய்வதற்காக சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், அவர்கள் இருவருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்பு திடீரென துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டனர்” என்றனர்.
அரசியல் கட்சி தலைவரும், அவரது மகனும் கொல்லப்பட்டத்தை அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அப்பகுதி காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், குற்றவாளிகளை விரைவில் கண்டறிய தனிப்படை அமைத்து தேடுதல் தீவிரப்படுத்தப்படும் என்றும் அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யமுனா பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வீட்டிலிருந்தபடியே மருத்துவ பரிசோதனை - கரோனாவைக் கட்டுப்படுத்தும் செயலி