நாடு முழுவதும் திருமலா திருப்பதி தேவஸ்தானத்திற்கு பக்தர்கள் காணிக்கையாக அளித்துள்ள நிலங்கள் உள்ளிட்ட அசையா சொத்துகளில் சில பயனில்லாமல் இருப்பதாக காரணம் காட்டி அதனை விற்பதற்கு ட்டி.ட்டி.டி போர்டு முடிவு செய்துள்ளது. இந்த முடிவினை எதிர்த்து பொதுமக்கள், முன்னாள் செயல் அலுவலர்கள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அரசியல்கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அதனை பொருட்படுத்தாமல் பயன்பாட்டில் இல்லாத வகையில் உள்ளது என்ற காரணத்தை முன்னிறுத்தி நிலங்கள் உள்ளிட்ட சொத்துகளை விற்பனை செய்வதில் நிர்வாகம் தொடர்ந்து முனைப்பு காட்டி வருகின்றது.
தமிழ்நாட்டில் உள்ள 23 அசையா சொத்துகள் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் பயனில்லாமல் உள்ள பல சொத்துகளின் பட்டியலை சேகரிக்கும் பணியில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. தற்போதுவரை விற்பனைக்கு குறிப்பிடப்பட்டுள்ள சொத்துகளின் மதிப்பு ரூ. 23.92 கோடிகள் எனத் தெரியவருகிறது. தேவஸ்தான நிர்வாக முடிவின்படி ரூ. 100 கோடி திரட்ட நிர்ணயிக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் உள்ள பயனில்லாத சொத்துகளை இனம் கண்டு விற்பனை செய்யும் பணியில் தேவஸ்தானம் போர்டு ஈடுபட்டுள்ளது.
- நகரப் பகுதிகள்
கிராமப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மட்டுமின்றி நகரப்பகுதிகளில் உள்ள காலிமனைகள், வீட்டுமனைகள் குடியிருப்பு பகுதிகள் கண்டறியப்பட்டு விற்பனை செய்ய உள்ளது. குறிப்பாக, குண்டூரு, ஹைதராபாத் பெங்களூரூ. நாந்தேட் உள்ளிட்ட நகரப்பகுதிகளில் உள்ள சொத்துகளை இனங்கண்டுள்ளது எனத் தெரியவருகிறது.
- தீவிர எதிர்ப்பு
ட்டி.ட்டி.டி யின் இந்த முடிவிற்கு தேசம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேவஸ்தான போர்டு உறுப்பினர்கள் சமய குருமார்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து மாநிலங்களவை உறுப்பினர் ராக்கேஷ் சின்ஹா. ட்டி.ட்டி.டி தலைவர் வை. வி. சுப்பா ரெட்டிக்கு எழுதியுள்ள கடிதத்தில், தேவஸ்தான நிர்வாகத்தின் முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீவாரி சொத்துக்களை விற்பதை நிறுத்த வேண்டும். சொத்துக்கள் அனைத்தும் பக்தர்கள் காணிக்கையாக அளித்தவை. இந்த முடிவு பக்தர்களின் உணர்வுகளுடன் தொடர்புடையது என்பதால் மறுபரிசீலனை செய்ய வேண்டும்
ஆந்திர மாநில முன்னாள் தலைமை செயலாளரும், ட்டி.ட்டி.டி யின் முன்னாள் செயல் அலுவலருமான ஐ.ஒய்.ஆர். கிருஷ்ணாராவ்,நிர்வாகத்தின் இந்த முடிவு பொருத்தமற்றது என்று கூறியுள்ளார்..
ட்டி.ட்டி.டி யின் முடிவு நியாயமானதல்ல. பக்தர்கள் காணிக்கையாக அளித்த சொத்துக்களை விற்க அறங்காவலர் குழுவுக்கு உரிமை இல்லை. சொத்துக்களைப் பாதுகாக்க முடியாத குழு சொத்துக்களை எவ்வாறு விற்க முடியும்? சென்னை, டெல்லி போன்ற இடங்களில் நியமிக்கப்பட்டுள்ள ட்டி.ட்டி.டி யின் துணை செயல் அலுவலர்கள். சொத்துக்களைப் பாதுகாப்பதற்கே நியமிக்கப்பட்டுள்ளனர். அறங்காவலர் குழுவை மறுசீரமைக்க வேண்டும். அரசியல் மற்றும் வணிக பின்னணி உள்ளவர்கள் குழுவிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும்.
இந்த மாதம் 28 ஆம் தேதி நடைபெறவுள்ள அறங்காவலர் குழு கூட்டத்தில் இந்த பிரச்சனை குறித்து வாக்கெடுப்பு நடத்துமாறு முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டி கோரியுள்ளார்.
கடந்த தெலுகு தேசம் கட்சி ஆட்சியின்போது கடவுளின் சொத்துக்களை விற்பனை செய்வதாக குற்றம் சாட்டிய ட்டி.ட்டி.டி தலைவர் ஒய்.வி சுப்பா ரெட்டி, தற்போது, அவர் தலைமையிலான குழு நிலத்தை விற்க எப்படி முடிவு செய்தது? குழுவின் பல உறுப்பினர்கள் இந்த முடிவை எதிர்த்தனர். இந்த மாதம் 28 ஆம் தேதி வாக்களிப்பு நடத்தப்பட வேண்டும்.
- எந்த தவறும் செய்யவில்லை - ட்டி.ட்டி.டி
ட்டி.ட்டி.டி யின் சொத்துகளை தாங்கள் விற்பனை செய்வதாக தவறான பிரசாரம் செய்யப்படுவதாக ஒய்.வி சுப்பா ரெட்டி விமர்சித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டிலேயே, ட்டி.ட்டி.டியின் சொத்துக்களை விற்க முடிவு செய்யப்பட்டது. இப்போது விமர்சிப்பவர்கள் அப்போது அறங்காவலர் குழு உறுப்பினர்களாக இருந்தனர். ஸ்வாமிக்கு பல சொத்துக்கள் உள்ளன. சுவாமியின் சொத்துகளை விற்பது எங்கள் நோக்கம் அல்ல. பயனற்ற சிலவற்றை விற்க விரும்புகிறோம். அதனை நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. 28 ஆம் தேதி நடைபெறும் அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவுசெய்யப்படும்.
இந்த பிரச்சனை அரசியல் ரீதியாகவும் பெரும் எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது. பிஜேபியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரகுராம் கிருஷ்ணம்ராஜூ, ஜி.வி.எல். நரசிம்ம ராவ் ஆகியோர் ட்டி.ட்டி.டி யின் இந்த முடிவை தவறானது எனக் கூறியதோடு அரசியல் ரீதியான போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக கூறினர். பக்தர்கள் ஸ்வாமிக்கு பக்தியுடன் அர்ப்பணித்த தங்கள் சொத்துக்களை அவர்களை அவமதிக்கும் வகையில் விற்பனை செய்கின்றனர் என ஜனசேனா கட்சித்தலைவர் பவன் கல்யாண் ட்வீட் செய்துள்ளார்.