கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள ஊரடங்கு காரணமாக, மக்கள் அதிகம் கூடும் இடமான வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன.
இதனிடையே, ஊரடங்கை ஜூன் 30ஆம் தேதி நீட்டித்த மத்திய அரசு, ஜூன் 8ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதி வழங்கியது. மேலும், இதுதொடர்பாக அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறியது.
அந்த வகையில், கடந்த 75 நாள்களாக மூடப்பட்டுள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிதுன மாச பூஜைக்கு வரும் 14ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. இந்த அறிவிப்பு பக்தர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
கரோனா பரவலைக் கருத்தில்கொண்டு இணையதளம் மூலமே பக்தர்கள் தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும் என கேரள தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. ஒரு நாளைக்கு வெறும் 200 பக்தர்களை மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவித்துள்ள தேவசம், வெறும் 50 பேர் மட்டுமே கருவறை அருகில் சென்று வழிபட அனுமதிக்கப்படுவர் எனவும் கூறியுள்ளது. தரிசனத்திற்காக காலை 4 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 11 வரையும் கோயில் திறந்திருக்கும்.
இதுகுறித்து அம்மாநில அமைச்சர் கடக்கம்பல்லி சுரேந்தர் கூறுகையில், "வெளி மாநிலங்களிலிருந்து தரிசனம் செய்ய வருபவர்கள் இ-ஜக்ராதா இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும், தங்களுக்கு கரோனா தொற்று இல்லை என்ற உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ்களையும் கண்டிப்பாக எடுத்து வர வேண்டும்" என்றார்.
கோயில் பிரசாதம் வாங்க விரும்பினால், அதற்கும் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யுமாறும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 'கேரள வனத்துறை மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது'