பல்வேறு குறுங்கதைகள், சிறுகதைத் தொகுப்புகள், புதினங்கள் எழுதி 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியர்களின் மனதில் இடம்பிடித்துள்ள மூத்த எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட், இன்று தனது 86ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். 1934ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள கசௌளி பகுதியில் பிரிட்டானிய தம்பதியருக்குப் பிறந்த ரஸ்கின் பாண்ட், சுதந்திரத்திற்குப் பின்னரும் இந்தியாவிலேயே வசித்து வருகிறார்.
இந்திய குடிமகனாக வாழத் தொடங்கிய அவர், இமயமலை பகுதியைச் சார்ந்த வாழ்க்கை அனுபவங்களை விரிவாக எழுதியுள்ளார். சிறுவர்களுக்கான நூல்கள் பலவற்றை எழுதியுள்ள ரஸ்கின் பாண்ட், தலைசிறந்த சிறார் எழுத்தாளராக கருதப்படுகிறார்.
சாகித்திய அகாடமி, பத்மஸ்ரீ, பத்ம பூஷண் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ள ரஸ்கின் பாண்ட், தனது பிறந்த நாளில் எழுத்துத் தொடர்பான போட்டிகளை நடத்தி இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து வருகிறார். கரோனா ஊரடங்கு காரணமாக இந்தப் பிறந்த நாளை தனது ரசிகர்களுடன் கொண்டாட முடியாமல் போனது பெரும் வருத்தமளிப்பதாக, ரஸ்கின் பாண்ட் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: புதிய சீர்திருத்தங்களால் பாதுகாப்புத்துறையில் மாற்றம் நிகழும் - டி.ஆர்.டி.ஓ இயக்குநர்